தமிழக அரசியல் வரலாற்றில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த ‘திமுக – அதிமுக’ ஆகிய இருமுனை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய அரசியல் மாற்றத்துடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற முதற்கட்ட நிகழ்வில், அவருடன் சேர்த்து செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 பேர் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்தச் சூழலில், இன்று ( காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தமிழக அமைச்சரவை விரிவாக்க விழா மிக விமரிசையாக நடைபெறுகிறது.

இன்றைய விரிவாக்கத்தில் மொத்தம் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத், முகமது பர்வேஸ், பார்த்திபன், மரிய வில்சன் ஆகியோர் முக்கியப் பொறுப்புகளை ஏற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் தமிழக அமைச்சரவையின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 33 ஆக உயர்கிறது. இந்தச் சூழலில், ஒரு மாநில அமைச்சரவையில் அதிகபட்சமாக எத்தனை அமைச்சர்கள் இடம்பெறலாம்? அதற்கான சட்ட விதிமுறைகள் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்தவும், கட்சிக்குள் எழும் அதிருப்திகளைச் சமாளிக்கவும் தாராளமாக அமைச்சர் பதவிகளை வாரி வழங்கி வந்தன. அமைச்சரவையின் எண்ணிக்கைக்கு எவ்வித எல்லையும் இல்லாததால், அரசுப் பொக்கிஷத்திற்கு பெரும் சுமை ஏற்பட்டது.

இதற்குக் கடிவாளம் போடும் வகையில், கடந்த 2003-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 91-வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் உட்பட ஒட்டுமொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை, அந்த மாநிலத்தின் மொத்தச் சட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) எண்ணிக்கையில் 15 சதவீதத்தைத் தாண்டக் கூடாது. அதேநேரத்தில், சிறிய மாநிலங்களாக இருந்தாலும் அமைச்சர்களின் எண்ணிக்கை 12-க்குக் குறைவாக இருக்கக் கூடாது.

இந்த 15 சதவீத வரம்பின் அடிப்படையில் தமிழக அமைச்சரவையின் நிலவரத்தைக் கணக்கிட்டால் மிழகத்தில் முதலமைச்சர் விஜய் உட்பட அதிகபட்சமாக 35 பேர் மட்டுமே அமைச்சரவையில் நீடிக்க முடியும். அந்த சட்டப்பூர்வ எல்லையைத் தாண்ட இயலாது.

தற்போது எம்.எல்.ஏ-க்களாக இருப்பவர்கள் மட்டுமே புதிய அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவரைக் கூட அமைச்சராக்க அரசியல் சாசனத்தில் இடமுண்டு. அரசியல் சாசன விதிகளின்படி, முதலமைச்சர் விரும்பினால் சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவரை அமைச்சராக நியமிக்கலாம். ஆனால், அவர் பதவியேற்ற தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் தமிழகத்தின் ஏதாவது ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் மூலமாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு 6 மாத காலத்திற்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், அவரது அமைச்சர் பதவி தானாகவே ரத்தாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது முதலமைச்சர் விஜய்யையும் சேர்த்து 33 அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதால் மீதமுள்ள 2 இடங்களுக்கு யார் அமைச்சர்களாக பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் அதில் ஒரு இடம் இந்திய ஜனநாயக முஸ்லிம் லீக் கட்சிக்கும் மற்றொரு இடம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் கூட்டணி கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என தமிழக வெற்றி கழகம் அழைப்பு விடுத்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்த அழைப்பை நிராகரித்துவிட்டது. அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் கட்சி மட்டும் அமைச்சரவையில் இடம்பெற விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் இரு கட்சிகளுக்கும் தள ஒரு இடங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.