ஜப்பானில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மனிஷ் குமார் என்ற இந்திய உணவக உரிமையாளர், அந்நாட்டின் புதிய விசா விதிமுறைகளால் தான் நாடுகடத்தப்படலாம் என்ற அச்சத்தில் கண்ணீர் மல்க கலங்கியுள்ளார். டோக்கியோவுக்கு அருகில் உள்ள சைதாமா பகுதியில் கறி உணவகம் நடத்தி வரும் அவர், சமீபத்திய கூட்டமொன்றில் பேசுகையில், “நான் ஜப்பானில் 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன் இங்குள்ள மக்களும் அதிகாரிகளும் எனக்குப் பேராதரவு அளித்துள்ளனர்.

மேலும் திடீரென விதிகளை மாற்றிவிட்டு என்னை இந்தியாவுக்குத் திரும்பிப் போ என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?” என்று கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார். ஜப்பான் அரசு கொண்டு வந்துள்ள புதிய கடுமையான வணிக விசா விதிகளின்படி, முதலீட்டு மூலதனம் 5 மில்லியன் யென்னிலிருந்து  30 மில்லியன், சுமார் ₹1.8 கோடி ஆறு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதே இந்த நெருக்கடிக்குக் காரணமாகும்.

இதனால் மனிஷ் குமாரின் பிள்ளைகள் ஜப்பானிலேயே பிறந்து வளர்ந்து தற்போது அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்களுக்கு ஜப்பானிய மொழி மட்டுமே பேசத் தெரியும் என்பதோடு, அவர்களின் நண்பர்கள் வட்டாரமும் ஜப்பானியர்களாகவே உள்ளனர். கடினமாக உழைத்து அங்கேயே ஒரு வீடும் வாங்கியுள்ள மனிஷ் குமார், தனது பிள்ளைகளுக்கு இந்தியாவின் மொழி அல்லது கலாச்சாரம் பற்றி எதுவும் தெரியாது என்றும், அவர்கள் முற்றிலும் ஜப்பானியர்களாகவே வாழ்கிறார்கள் என்றும் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் திடீர் விதி மாற்றங்களால் தங்களைப் போன்ற நீண்டகால குடியிருப்பாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது கொடூரமானது என்று அவர் வேதனை தெரிவித்துள்ள நிலையில், இந்த கடுமையான புதிய குடிவரவு விதிகளை மறுபரிசீலனை செய்யக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றும் ஜப்பானில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.