உத்திரபிரதேச மாநிலம் ஜடோன்பூர் கிராமத்தில் நவாப்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் 3 பெண்களை திருமணம் செய்த நிலையில் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் பீகாரை சேர்ந்த ஒரு 21 வயது பெண்ணை நான்காம் முறையாக திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரிடம் தனக்கு 265 அடியில் நிலம், மீன் வளர்ப்பு செய்வதற்கான குளம் இருப்பதாக கூறியதோடு, அந்த குளத்தின் அருகே ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையை திறக்கப் போவதாக கூறியுள்ளார்.

இவர் கூறியதை உண்மையான நம்பிய குடும்பத்தினர் கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி அவருக்கு இளம்பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். பின்னர் நவாப் ஷாவின் வீட்டிற்கு அந்த பெண் சென்றபோதுதான் ஏற்கனவே அவருக்கு திருமணம் ஆகி 3 மனைவிகளும், 10 குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது.

அவருடைய முதல் மனைவி 5 குழந்தைகளுடன் ஜடான்பூரில் வசித்து வரும் நிலையில், 2வது மனைவி 4 குழந்தைகளுடன் பார்த்தாபூரில் வசித்து வருகிறார். 3வது மனைவி ஒரு குழந்தையுடன் ஆன்லாவில் வசித்து வருகிறார் என்பது மணமகளுக்கு தெரிய வந்தது.

இது குறித்து நவாப் ஷாவிடம் மணமகள் கேட்டபோது அவர் இளம்பெண்ணிடமிருந்து நகையை பறித்துவிட்டு அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட இளம்பெண் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததாக கூறப்படுகிறது.

இதனால் உயர் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் கொடுத்தார். பின்னர் உயர் அதிகாரிகளின் உத்தரவின் படி காவல்துறையினர் நவாப் ஷா மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.