மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் அமர்வு தொடங்கிய முதல் நாளே அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாம் நாளான நேற்று அவை கூடியது. அப்போது லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவும், அதானி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளும் முழக்கங்களை எழுப்பின. தொடர் கோஷத்தால் அவை நேற்று மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்றம் 3-வது நாளாக இன்றும் முடங்கியது. லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து தவறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் கோஷங்கள் எழுப்பினர். அதேபோல் அதானி விவகாரத்தில் விவாதம் தேவை என எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் அவையின் மையப்பகுதிக்கு வந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.