தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கக்கரை கிராமத்தைச் சேர்ந்த பிச்சையப்பன் மனைவி மணியம்மாள்(75), அவரது மகன் சரபோஜி(40), அவரது மனைவி செந்தமிழ் செல்வி(38) ஆகிய மூன்று பேரும் நெற் பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கூறியதாவது, எங்கள் ஊரில் 2.50 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளோம். விவசாயத்தை நம்பிய வாழ்ந்து வருகிறோம். எனது இறந்த மகனின் மனைவி விளைநிலங்களில் எனக்கும் பங்கு உண்டு எனக் கூறி 30 பேருடன் வந்து நெற்பயிர்களை பிடுங்கி சேதப்படுத்தியுள்ளார். மேலும் நிலத்தை முழுமையாக ஒப்படைக்குமாறு மிரட்டி தாக்கினார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் உயிர் வாழ பயமாக இருக்கிறது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். எனது மருமகள் மற்றும் அவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நெற்பயிர் அறுவடை செய்ய இடையூறு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.