
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் சிப்காட் பகுதியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் பணியில் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
சாலையின் நடுவே மண் தோண்டப்பட்ட நிலையில், அப்பகுதியில் வேலை நடைபெறாதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதால் தற்போது அப்பகுதியில் உள்ள மண்ணை பாலம் அமைக்கும் பகுதியில் நிரப்பும் பணியை தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். அப்போது திடீரென மனித எலும்புகளை கண்ட தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மூலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் படி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது 3 மனித எலும்புகள் மற்றும் பேண்ட் இருந்தது. அவற்றை கைப்பற்றிய நிலையில் ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் கூறும் போது, “கட்டுமான பணிக்காக 45 நாட்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது.
அந்த கற்களை தற்போது இடம் மாற்றும் போது அதற்குள் இந்த மனித எலும்புகள் இருந்தது. மனித எலும்புகள் யாருடையது என்று விரைவில் தெரியவரும்” என்று கூறினார். மேலும் ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் காணாமல் போனவர்களின் விவரங்களை சேக ரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.