உத்தரபிரதேச மாநிலத்தின் பண்டா மாவட்டம் பிஸண்டா பகுதியில் அதிர்ச்சி மிகுந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அங்கு வசிக்கும் 36 வயதான ரோஷ்னி என்ற பெண்மணியை கடந்த மூன்று ஆண்டுகளில் ஏழு முறை பாம்பு கடித்துள்ளது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும் அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக அவர் உயிர் தப்பியுள்ளார். சமீபத்தில் மேலும் ஒரு முறை கறுப்பு வகை பாம்பு கடித்த நிலையில், தற்போது மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரோஷ்னியின் குடும்பத்தினர் தெரிவித்ததாவது, அவர் எப்போது வீட்டில் வேலை செய்தாலும் அல்லது விவசாய பணியில் ஈடுபட்டாலும், எங்கிருந்தோ பாம்பு வந்து கடிப்பது வழக்கமாகியுள்ளது. இந்த முறைதான் அல்லாமல், கடந்த 3 ஆண்டுகளாகவே வெவ்வேறு இடங்களில் பாம்பு கடித்து வந்துள்ளதுடன், ஒவ்வொரு முறையும் பாம்பு வேறுவிதமான இடங்களில் கடித்திருப்பதாகவும், அவ்வப்போது சிகிச்சை காரணமாக உயிர் தப்பியுள்ளதாகவும் கூறுகின்றனர். இதனால், தற்போது இந்த சம்பவம் குறித்து கிராம மக்களிடையே பலவிதமான செய்திகள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், பண்டா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ரோஷ்னி அனுமதிக்கப்பட, அவரை சிகிச்சை செய்துவரும் துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வினீத் சச்சான் கூறுகையில், “மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், தற்போது அவரின் உடல் நிலை சீராக உள்ளதுடன், விரைவில் முழுமையாக குணமடைவார் என நம்பிக்கை உள்ளது. அவரை ஏற்கனவே பல முறை பாம்பு கடித்துள்ளதால் இது வழக்கத்திற்கு மாறான நிகழ்வாக இருந்தாலும், மருத்துவ ரீதியாக இது சாத்தியமான ஒன்றாக இருக்கலாம்” என்றார்.