சத்தீஸ்கர் மாநிலத்தின் சூர்ஜ்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டாம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவர், ஆசிரியரிடம் அனுமதி பெறாமல் கழிவறைக்கு சென்றதற்காக கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஆசிரியர் தினமான வெள்ளிக்கிழமை அன்று நடந்துள்ளது. இந்த தண்டனையின் தீவிரத்தால், அந்த சிறுமி நடக்கவோ, நிற்கவோ முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார்.

சூர்ஜ்பூர் மாவட்டத்தின் சீதாப்பூர், பிரதாப்கர் பகுதியில் உள்ள டிபிஎஸ் பொதுப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்தது. இரண்டாம் வகுப்பு மாணவி சம்ரிதி குப்தா, கழிவறைக்கு செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றார். அப்போது, செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஆசிரியை நம்ரதா குப்தா, “எங்கே போகிறாய்?” என்று கேட்டார்.

கழிவறைக்கு செல்வதாக சிறுமி அப்பாவியாக பதிலளித்ததும், ஆசிரியை கோபத்தில் சிறுமியை குச்சியால் அடித்து, பின்னர் வகுப்பறையில் 100 முறை உட்கார்ந்து எழும்படி தண்டனை விதித்ததாக கூறப்படுகிறது. இந்த கொடூர தண்டனையால், 8 வயது சிறுமி வலியால் அழுது, இன்னும் நடக்க முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது கால் தசைகள் வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சீதாப்பூர் கல்வி அலுவலர் இந்து திர்கி, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், ஆசிரியை குற்றவாளியாக கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.