குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் 12ம் தேதி பயணத்தைத் தொடங்கிய சில நொடிகளில் கோர விபத்தில் சிக்கியது. இந்த துயரச் சம்பவத்தில், விமானத்தில் பயணித்த 229 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.

இதில், விமானம் மோதிய மருத்துவக் கல்லூரி மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே ஒரு பயணர் மட்டுமே விபத்தில் இருந்து உயிர் பிழைத்துள்ளார். இதையடுத்து, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இந்தப் பின்னணியில், விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (Aircraft Accident Investigation Bureau) தனது முதற்கட்ட அறிக்கையை 15 பக்கங்களாக இன்று (ஜூலை 12) மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. கருப்பு பெட்டி (Black Box) பகுதியிலிருந்து மீட்கப்பட்ட விமானி உரையாடல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரு என்ஜின்களும் திடீரென பழுதடைந்ததே விபத்துக்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ஜின்களில் எரிபொருள் விநியோகம் திடீரென தடைபட்டது, இயந்திர சக்தி இழந்து விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. “எரிபொருளை நிறுத்தினீர்களா?” என ஒரு விமானி கேட்டதற்குப் பதிலாக, மற்றொருவர் “நான் எதுவும் செய்யவில்லை” என பதிலளித்ததும் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, விமானத்தில் மின் சக்தி முற்றிலும் தடைபட்டது,  இதனால் அவசரகால மின் சாதனம் (RAT) தானாகவே செயல்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், விமான பராமரிப்பு பதிவு மற்றும் பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது, இரண்டு என்ஜின்களும் முந்தைய பராமரிப்பு அட்டவணையின் அடிப்படையில் சரியான காலக்கெட்டிற்குள் நிறுவப்பட்டவை எனவும் தெரியவந்தது. இருப்பினும், விபத்து நடந்த அன்று விமானத்தில் நான்கு ‘கேட்டிகரி சி’ குறைபாடுகள் (MEL) இருந்தன என்றும், அவை ஜூன் 9ல் கண்டுபிடிக்கப்பட்டாலும், ஜூன் 19 வரை சரி செய்யப்படாமல் இருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், விமான கதவு கண்காணிப்பு கேமரா, விமான நிலைய வரைபடம், கம்ப்யூட்டர் நெட்வொர்க் மற்றும் பிரிண்டர் ஆகியவை செயலிழந்திருந்தன.இந்த விபத்து தொடர்பான முழுமையான நிபுணர்த் தடயங்கள் இன்னும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.