
தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் இவற்றில் சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூரியத்தில் பணியாற்றி வந்த பழங்குடி பட்டதாரி ஆசிரியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழக அரசு அண்மையில் பணிநீக்கம் செய்துள்ளது.
இதனால் மாணவர்களின் கல்வி முழுமையாக பாதிக்கப்படும். தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பழங்குடியினர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மையமாகும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். கடந்த 2017 ஆம் ஆண்டு வரை 23 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது அது 19000 பேருந்துகளாக குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய சீமான், போக்குவரத்து துறையில் 25 ஆயிரம் காலி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.