தமிழ் சினிமாவிற்கு 2024 ஆம் ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மலையாள சினிமாவுக்கு 2024 ஆம் ஆண்டில் 700 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தகவல் வெளிவந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவுக்கு ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். முன்னணி நடிகர்களின் படங்களால் லாபம் ஏற்றலாம் என்று காத்திருந்த திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு சற்று ஏமாற்றம் மிஞ்சியது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டில் 3000 கோடி மொத்தம் படம் தயாரிக்க செலவு செய்த நிலையில் 1000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சிறு பட்ஜெட் படங்களுக்கு 2 கோடி முதல் 5 கோடி ரூபாயும், நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு 10 கோடி முதல் 20 கோடி வரையிலும், செலவு செய்த நிலையில் மொத்தம் 156 சிறிய பட்ஜெட் படங்கள் வெளியான நிலையில் இவற்றின் தயாரிப்பு செலவு 400 கோடியாக இருக்கிறது. பெரிய பட்ஜெட் படங்களுக்கு 50 முதல் 200 கோடி ரூபாய் வரை செலவு செய்த நிலையில் மொத்தமாக 241 படங்கள் வெளியாகியுள்ளது. இதில் 18 திரைப்படங்கள் மட்டும்தான் லாபம் பார்த்துள்ளது. இந்த 18 படங்களில் விஜய் நடிப்பில் வெளிவந்த தி கோட், சிவகார்த்திகேயன் நடித்த அமரன், தனுஷ் இயக்கி நடித்த ராயன் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்கள் வெற்றியை பதிவு செய்தது.

இதற்கு அடுத்தபடியாக ரஜினியின் வேட்டையன், அரண்மனை 4, மகாராஜா, மெய்யழகன் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது. நடுத்தர பட்ஜெட்டில் வெளிவந்த டிமான்டி காலனி 2, வாழை, ஸ்டார், பிளாக், ரோமியோ, கருடன், பிடி சார் மற்றும் அந்தகன் படங்களும் வெற்றி பெற்ற நிலையில், சிறு பட்ஜெட்டில் உருவான லப்பர் பந்து, பேச்சி மற்றும் லவ்வர் போன்ற படங்களும் வெற்றி பெற்றது. மேலும் மொத்தமுள்ள 241 படங்களில் 18 படங்கள் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் 213 படங்கள் தோல்வியை அடைந்துள்ளது. அதாவது 7 சதவீத படங்கள் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், மீதமுள்ள படங்கள் தோல்வியடைந்ததால் ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.