தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகள் பரவியது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தமிழக காவல்துறை வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது கிடையாது என விளக்கம் கொடுத்தனர். அதன் பிறகு தமிழகத்திற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி கொடுத்திருந்தார். இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய செய்திகள் குறித்து பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகள் வருவது வருத்தம் அளிக்கிறது. வட மாநிலத்தவர்கள் குறித்த சர்ச்சைக்கு திமுகவினர் தான் காரணம். திமுக ஆரம்பித்த இந்து எதிர்ப்பு எனும் பிழைப்பு வாத நடவடிக்கையில் தொடங்கிய வெறுப்பு பிரச்சாரம் தற்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு வளர்ந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்த அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வட மாநிலத்தவர்கள் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரத்தை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை நான் காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயகக் குரல் வளையை நசுக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஒரு சாமானிய மனிதராக சொல்கிறேன். 24 மணி நேரம் உங்களுக்கு கால அவகாசம் கொடுக்கிறேன். மேலும் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.