தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தத் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, மக்கள் பேராதரவோடு நடிகர் விஜய் தலைமையிலான தவெக அரசு புதிய ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாட்டில் பேசிய அண்ணாமலை, 2026-ல் இளைஞர்கள் எப்படி ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கினார்களோ, அதேபோல வரும் 2031ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் மற்றுமொரு பிரம்மாண்ட ஆட்சி மாற்றம் ஏற்படும் என அதிரடியாகக் கூறி ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உலுக்கியுள்ளார்.

​இப்போதைய தவெக அரசை நாங்கள் விமர்சிக்க மாட்டோம் என்றும், முதன்முறையாகப் பொறுப்பேற்றுள்ள புதிய அமைச்சர்கள் தட்டுத்தடுமாறும்போது ஒரு நல்ல சமுதாயமாக நாம் அவர்களைத் தூக்கிப்பிடிக்க வேண்டுமே தவிர, கீழ்த்தரமாக அழுத்தக் கூடாது என்றும் அண்ணாமலை மேடையில் பெருந்தன்மையாகப் பேசியுள்ளார்.

இருப்பினும், அவர் “2031-ல் ஆட்சி மாற்றம் உறுதி” என்று ஆணித்தரமாகக் கூறியிருப்பது, மறைமுகமாக தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியை நோக்கி வீசப்பட்ட அரசியல் கணையாகத்தான் பார்க்கப்படுகிறது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக உருவெடுத்து 2031-ல் ஆட்சியைப் பிடிக்கும் என்று அண்ணாமலை போட்ட புதிய ஸ்கெட்ச், தவெக கூடாரத்தை தற்போதே சற்றே யோசிக்க வைத்துள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.