
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் நிதியை கொளத்தூரில் உள்ள அரசு கல்லூரி கட்டட வேலைக்குப் பயன்படுத்தியிருப்பது குறித்து, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்து அறநிலைத்துறை என்பது அரசாங்க சொத்தல்ல, அது ஹிந்து மக்களுக்கே சொந்தமானது எனத் தெரிவித்த அவர், அந்த நிதியை வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையிலும், அரசியல் நோக்கத்திலுமாக பயன்படுத்துவதை எதிர்த்தார்.
“நீதிமன்றத் தீர்ப்பில் கூட இந்து கோவில் பணியில் இந்துக்களை தவிர வேறு யாரையும் நியமிக்கக்கூடாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது. இது அந்த அடிப்படையை முற்றிலும் மீறியது,” என்று கூறினார்.
மேலும், “திராவிட அரசு பழனியில் கோவில் நிதியை பயன்படுத்தி கல்லூரி கட்டி, அங்கு முஸ்லிம் ஆசிரியர்களை நியமித்துள்ளது. இது ஹிந்து மத நம்பிக்கைக்கு எதிரான செயல்,” என தெரிவித்த எச். ராஜா, அமைச்சர் சேகர் பாபுவை நேரடியாக விமர்சித்தார்.
ஒவ்வொரு கோவிலின் நிதியும், அந்த கோவிலுக்கே பயன்படுத்தப்படவேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவை சொல்லிக்கொடுக்கும் பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக கல்லூரிகள் கட்டுவது அறநிலைத்துறைச் செயல் அல்ல,” எனக் கூறினார்.
“2026ல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும், இந்த முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும்,” என எச். ராஜா உறுதியளித்தார். “இருந்தபோதிலும், நான் 35 ஆண்டுகளாக பாஜக நிர்வாகத்தில் இருக்கிறேன், பதவிக்காக ஒருபோதும் கேட்கவில்லை. ஆனால் கட்சி எனக்கு எந்த குறையும் வைத்ததில்லை.
கட்சியின் தலைமை என்ன செய்ய சொல்கிறது என்பதை நான் கடைபிடிக்கிறேன். ஹிந்து கோவில்களை பாதுகாக்க இது அவசியமானது,” என்றார்.