
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் சமீப காலமாக சீமான் பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலையை புகழ்ந்து வருவதால் அவர் பாஜக கூட்டணியில் இணைவதாக செய்தி வெளியான நிலையில் இதற்கு அவர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது சென்னையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்ற நிலையில் அந்த போராட்டத்தில் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி வைக்கப் போகிறீர்களா என்று கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது, கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறது.
நீங்கள் ஒரு கட்சி ஆரம்பித்தால் கண்டிப்பாக கூட்டணி வைக்கலாம். ஒரே ஒரு கட்சியுடன் மட்டும் தான் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது. அது டொனால்ட் டிரம்ப்வுடன் மட்டும் தான் என்று கூறினார். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆரம்ப முதலே தனித்து தான் போட்டி என்று கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.