
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடர்பாக பாராட்டு விழா நடைபெற்ற போது அதில் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறி செங்கோட்டையன் அந்த விழாவை தவிர்த்தார். இதேபோன்று எடப்பாடி பழனிச்சாமி மீது முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இது தொடர்பாக தற்போது செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுக வீழ்த்தப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். அப்போது ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் யார் என்பதை அறிந்து கொள்வார்கள். எடப்பாடி பழனிச்சாமி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலோடு அதிமுகவுக்கு மூடு விழா நடத்தப் போகிறார்.
எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய சுயநலத்திற்காகவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் எம்.ஜி.ஆர் கட்சியை கேடயமாக பயன்படுத்துகிறார். திமுகவினர் தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக உதவுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இனியும் உண்மையை புரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிச்சாமிக்கு காவடி தூக்கினால் கண்டிப்பாக 2026 இல் அதிமுகவுக்கு மூடு விழா உறுதி. இதே நிலை நீடித்தால் நான் சொல்வது நடக்கும் என்பதை அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஜெயிப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமியின் முடிவு மட்டும் தான் காரணம் என்றும் கூட்டணி தொடர்பாக அவர் தான் சொல்ல வேண்டும் என்றும் கூட்டணி கூட்டணி என்று அவர் பேசுகிறார் என்றும் கூறினார்.