கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிய நிலையில் இனி எந்த காரணத்தைக் கொண்டும் பாஜக கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தனர். அதாவது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவினரை விமர்சித்ததாகவும் அக்கட்சியின் மறைந்த தலைவர்களை அவமதிப்பதாகவும் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பின்னர் கூட்டணியில் இருந்து விலகினர். இந்நிலையில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு எடப்பாடி பழனிச்சாமி 2026 ஆம் ஆண்டு தேர்தல் சூழ்நிலையை பொறுத்து கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார். இதனால் மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க  வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது பற்றி நிருபர்கள் கேட்டனர். அவர் கூறியதாவது, பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. எங்கள் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது. கூட்டணி தொடர்பாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்புகிறார்கள். மேலும் ஒருமித்த கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்று இபிஎஸ் கூறுவதை திரித்து பேசுகிறார்கள் என்றும் கூறினார்.