பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் வந்தடைந்தார். தொடர்ந்து திறந்த வெளி வாகனத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவு சின்னமாக  ஜல்லிக்கட்டு காளை வழங்கப்பட்டது.

இதையடுத்து திருப்பூர் பல்லடத்தில் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, “என் மண் என் மக்கள்” யாத்திரை மூலம் பாஜகவிற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் என கருதி உழைக்க வேண்டும். தமிழ் மொழி மிகவும் பழமையானது, பல்வேறு சிறப்புகளை கொண்டது. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். 2024 இல் தமிழகத்தில் அதிகமாக பாஜகவை மட்டும் பற்றி தான் பேசுகின்றனர். தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. தமிழகம் எப்போதும் தேசியத்தின் பக்கம் உள்ளது என்பதை இந்த கூட்டம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் கொங்கு மண்டலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு பல வழிகளில் துணை நிற்கிறது. 1991 ஆம் ஆண்டு எனது யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து தான் தொடங்கினேன். கன்னியாகுமரி மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு தான் பயணத்தை தொடங்கினேன். நாடு தான் முதன்மை என பாஜக கருதுகிறது. அண்ணாமலை ஆற்றல் மிக்கவர், துடிப்பானவர். தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது. அரசியல் சாசனத்தில் 370 பிரிவை ரத்து செய்து வரலாற்று சாதனை செய்துள்ளோம். தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது” என தொடர்ந்து பேசி வருகிறார்.