2024 டி20 உலகக் கோப்பைக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை தேர்வு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

2023 ஒரு நாள் உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது இந்திய அணி. சொந்த மண்ணில் அனைத்து போட்டிகளையும் வென்று கடைசியாக ஒரு போட்டியில் தோல்வியடைந்து கோப்பையை இழந்தது வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களின் இதயத்தையும் உடைத்து. இருப்பினும் இதிலிருந்து மீண்டு அடுத்த கட்டத்திற்கு தயாராக வேண்டும். தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட டீம் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. நேற்று நடந்த முதல் போட்டியில் டீம் இந்தியா வெற்றிபெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் அடுத்ததாக 2024 டி20 உலக கோப்பை வரவுள்ள நிலையில், அதற்காக இளம் வீரர்களை தயார் படுத்தி வருகிறது பிசிசிஐ. இதற்கிடையே வரும் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் ஆடுவார்களா என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுகிறது. ஏனெனில் 2022 டி20 உலக கோப்பையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.

அதன் பின் ரோகித் சர்மா இந்திய டி20 அணியை வழி நடத்தவில்லை. 2023 இல் இருந்து டி20 போட்டிகளை ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி விளையாடியது. இந்நிலையில் வரும் T20 உலகக் கோப்பையில் தங்கள் அணியில் இரு மூத்த நட்சத்திரங்களையும் (கோலி, ரோஹித்) இந்தியா தேர்வு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்போர்ட்ஸ்கீடாவில் வாசிம் அக்ரம் கூறுகையில், “டி20 உலகக் கோப்பை இன்னும் சில மாதங்களில் வர உள்ளது. இருவரையும் (ரோஹித், கோலி) நான் தேர்வு செய்வேன். அவர்கள் இந்தியாவுக்கு முக்கிய வீரர்களாக இருப்பார்கள், அதில் சந்தேகமில்லை. டி20யில் உங்களுக்கு கொஞ்சம் அனுபவம் தேவை. நீங்கள் இளம்வீரர்களை மட்டும் நம்பி இருக்க முடியாது,”  என்று கூறினார்.

அதேபோல முன்னதாக முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர், ரோஹித் சர்மாவை டி20 உலகக் கோப்பையில் சேர்க்க வேண்டும் என்று கூறினார், ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டுமின்றி ஒரு கேப்டனாகவும் “அவர்கள் (ரோஹித் மற்றும் கோலி) இருவரும் தேர்வு செய்யப்பட வேண்டும், இருவரும் எடுக்கப்பட வேண்டும், மேலும் முக்கியமாக, டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவை கேப்டனாக பார்க்க விரும்புகிறேன்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் மற்றும் கோலியின் டி20 செயல்பாடு எப்படி?

ரோஹித் 148 டி20 போட்டிகளில் 3853 ரன்களை குவித்து, 4 சதங்கள் மற்றும் 29 அரை சதங்களுடன் உள்ளார், அதே நேரத்தில் கோலி 115 ஆட்டங்களில் 4008 ரன்கள், ஒரு சதம் மற்றும் 37 அரைசதங்கள் அடித்துள்ளார்.. ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற இளம் தொடக்க ஆட்டக்காரர்களின் வலுவான வரிசையை இந்தியா கொண்டுள்ளது. இருப்பினும், இளம் திறமைகள் சோபிக்க தடுமாறினால், தேர்வாளர்கள் அல்லது பிசிசிஐ ரோஹித் மற்றும் கோலி பக்கம் திரும்புவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.. ரோஹித்தும் விராட்டும் கடைசியாக 2022 டி 20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக டி20 ஐ விளையாடினர், அதன் பின் இருவரும் (ஓராண்டாக) டி20 போட்டியில் ஆடாததால் அவர்கள் இருவரும் டி20 உலக கோப்பையில் ஆடுவது சந்தேகமே…