2024 ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியா விளையாடுவதில் சந்தேகம் உள்ளது.

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை டீம் இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி அடுத்ததாக 26ஆம் தேதி முதல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 சர்வதேச போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஹர்திக் பாண்டியா ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறுவது உறுதி என்று கூறப்படுகிறது. இது தவிர ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2024ல் விளையாடுவாரா இல்லையா? இது தொடர்பாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

2023 ஒருநாள் உலகக் கோப்பையின் போது ஹர்திக் பாண்டியா பந்துவீசும்போது கணுக்கால் காயமடைந்தார். இந்த காயம் காரணமாக ஹர்திக் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறினார். இந்த காயம் காரணமாக, ஆல்-ரவுண்டர் வீரர் ஹர்திக் முதலில் ஆஸ்திரேலியா மற்றும் பின்னர் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து வெளியேறினார். இந்த காயத்தில் இருந்து ஹர்திக் பாண்டியா இன்னும் முழுமையாக குணமடையவில்லை.

பிசிசிஐ வட்டாரம் பிடிஐயிடம், “ஹர்திக் கிரிக்கெட்டுக்கு திரும்புவது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்தியன் பிரீமியர் லீக்கிலும் அவர் கிடைப்பது குறித்து பெரிய கேள்விக்குறி உள்ளது. ஐபிஎல் 2024 சீசனுக்கான கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் சமீபத்தில் அறிவித்தது. 

ஹர்திக் பாண்டியா 2024 ஐபிஎல்லுக்கு முன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மும்பை இந்தியன்ஸால் வர்த்தகம் செய்யப்பட்டார். ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் நியமித்துள்ளது. 2024 ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியா ஆடவில்லை எனில் ரோஹித் சர்மா மீண்டும் மும்பை அணிக்கு கேப்டனாக திரும்பலாம். ஆனால் ரோஹித் தலைமை பொறுப்பை ஏற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இல்லையேல் பும்ரா அல்லது சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்படலாம்..

குஜராத் டைட்டன்ஸ் அணிக்குச் செல்வதற்கு முன், ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 7 சீசன்களில் விளையாடினார். ஹர்திக் பாண்டியாவுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பை வழங்கியது மற்றும் அவரது தலைமையின் கீழ் அதன் முதல் சீசனிலேயே ஐபிஎல் பட்டத்தை வென்றது குஜராத் டைட்டன்ஸ். இது தவிர, இரண்டாவது சீசனிலும் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, அங்கு சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.