சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அதிக  சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோகித் சர்மா.. மேலும்  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 9வது ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள்  டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 2 மணி முதல் விளையாடி வருகிறது. இந்திய அணியில் ரவி அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அதேசமயம் ஆப்கான் அணியில் நவீன் உல் ஹக் இடம்பெற்றுள்ளார்.. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன்  ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் துவக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் 21 ரன்களும்,  இப்ராஹிம் சத்ரான் 22 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதையடுத்து வந்த ரஹ்மத் ஷா 16 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ஆப்கானிஸ்தான் அணி 13.1வரில் 63 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது. அப்போது கேப்டன்ஹஷ்மத்துல்லா ஷாஹிதி மற்றும் ஒமர்சாய் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் பொறுமையாக ஆடி அரை சதம் கடந்தனர். பின் 35 வது ஓவரில் ஒமர்சாய் 69 பந்துகளில் (2 பவுண்டரி, 4 சிக்ஸர்) 62 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். இதனைத்தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 88 பந்துகளில் (8 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) 80 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

இந்த ஜோடி பிரிந்த பின் கடைசியில் வந்த வீரர்கள் (முகமது நபி 19 ரன்கள், நஜிபுல்லா சத்ரான் 2 ரன்கள், ரஷீத் கான் 16 ரன்கள்) யாரும் நிலைத்து ஆடாமல் விக்கெட்டுகளை விட்டனர். கடைசியாக முஜீப் உர் ரஹ்மான் 10 ரன்களும், நவீன் உல் ஹக் 9 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இறுதியில் ஆப்கானிஸ்தான அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 என்ற சவாலான ஸ்கோரை எட்டியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். மேலும் ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்..

இதையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் இளமிறங்கி இலக்கை துரத்தினர். அப்போது ரோகித் சர்மா 23 ரன்களை கடந்தபோது அதிவேகமாக உலக கோப்பையில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். ரோஹித் சர்மா 19 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்துள்ளார். அவருடன் டேவிட் வார்னர் இந்த சாதனையை ஏற்கனவே பகிர்ந்து கொண்டுள்ளார்.

தொடர்ந்து ரோகித் சர்மா 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என (30 பந்துகளில் 53 ரன்கள்) அதிரடியாக அரை சதம் கடந்தார். பின் ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர் விளாசினார். இதன்மூலம் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தினார். இந்த போட்டியில் ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் 3 வகை கிரிக்கெட்டிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கிறிஸ் கெய்ல்  2வது இடத்தில் உள்ளார்.

இதையடுத்து தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசிய ரோஹித் சர்மா 63 பந்துகளில் சதமடித்தார். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் (7) அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 6 சதங்களை அடித்து இருந்த நிலையில் தற்போது அதனை முறியடித்துள்ளார் ரோகித் சர்மா. மேலும் இந்தியஅணிக்காக உலக கோப்பையில் அதிவேமாகமாக (63 பந்துகளில்) சதமடித்து மற்றொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் 1983 உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக 72 பந்துகளில் கபில் தேவ் சதமடித்திருந்தார்.. இதனிடையே இஷான் கிஷன் 47 ரன்களில் அவுட் ஆனார். தற்போது இந்திய அணியில் ரோஹித் – விராட் கோலி ஆடி வருகின்றனர். ரோஹித் 70 பந்துகளில் 108 ரன்களுடனும், கோலி 2 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி 20 ஓவரில் 168 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

அதிக சர்வதேச சிக்ஸர்கள் (இன்னிங்ஸ்) :

ரோஹித் சர்மா (இந்தியா) – 555 சிக்ஸர்கள்* (473 இன்னிங்ஸ் )

கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) – 553 சிக்சர்கள் (551 இன்னிங்ஸ்)

ஷாஹித் அப்ரிடி (பாகிஸ்தான்) – 476 சிக்ஸர்கள்

பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) – 398 சிக்ஸர்கள்

மார்ட்டின் குப்டில் (நியூசிலாந்து) – 383 சிக்சர்கள்

எம்எஸ் தோனி (இந்தியா) – 359 சிக்சர்கள்

சனத் ஜெயசூர்யா (இலங்கை) – 352 சிக்சர்கள்

இயான் மோர்கன் (இங்கிலாந்து) – 346 சிக்ஸர்கள்

ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) – 328 சிக்சர்கள்

ஜோஸ் பட்லர் – 312 சிக்ஸர்கள்*

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் அதிவேகமாக 1,000 ரன்களை கடந்தவர்கள் :

ரோஹித் சர்மா – 19 இன்னிங்ஸ்.

டேவிட் வார்னர் – 19 இன்னிங்ஸ்.

ஏ பி டி வில்லியர்ஸ் – 20 இன்னிங்ஸ்

சச்சின் டெண்டுல்கர் – 20 இன்னிங்ஸ்

சவுரவ் கங்குலி – 21 இன்னிங்ஸ்

உலகக் கோப்பையில் அதிக சதம் (இன்னிங்ஸ்):

ரோஹித் சர்மா – 7* (19).

சச்சின் டெண்டுல்கர் – 6 (44).