நவிமும்பையில் நேற்று முன்தினம் நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 3வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதனைப் படைத்தது.

ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன்கள் என்ற இமாலய இலக்கை, ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127 ரன்கள், 14 பவுண்டரிகள்) மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (89 ரன்கள்) ஆகியோரது அசாதாரணமான பேட்டிங்கால் இந்திய அணி 48.3 ஓவர்களில் எட்டிப் பிடித்தது.

இதன்மூலம், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை விரட்டிப் பிடித்த அணி என்ற புதிய சாதனையை இந்திய அணி தன்வசப்படுத்தியது. கடைசி வரை களத்தில் நின்று வெற்றிக்கு இட்டுச் சென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ், உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட நேரம் தேம்பித் தேம்பி அழுதார்.

வெற்றிக்குப் பிறகுப் பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், “எல்லாம் கனவு போல் இருக்கிறது. இந்தியாவை வெற்றி பெறச் செய்வதே எனது ஒரே எண்ணமாக இருந்தது. கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் இருந்து நீக்கப்பட்ட வலி இன்னும் மனதில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அழுதிருக்கிறேன். நிறைய கடினமான நாட்களைக் கடந்து வந்திருக்கிறேன். கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார்” என்று கூறி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜெமிமாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

“>

 

இந்தச் சூழலில், 2018ஆம் ஆண்டில் ஜெமிமா ரோட்ரிக்ஸுடன் செய்த வலைப்பயிற்சிக்குப் பிறகு, “ஜெமிமா ரோட்ரிக்ஸ் என்ற பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இன்று அவள் சில தோல்விகளைச் சந்தித்தார். ஆனால் ஜெமிமா இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுப்பார்” என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் பதிவிட்டிருந்த பழைய ‘எக்ஸ்’ தளப் பதிவு (ட்வீட்) ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.