வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பிரேமலதா அறிவித்துள்ளார்..

அதிமுக கூட்டணியில் 5 மக்களவைத் தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேமுதிக நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உடன் எல்.கே சுதீஸ் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் வந்தனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் வந்த பிரேமலதாவுக்கு கே.பி முனுசாமி தலைமையில் மூத்த தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதி உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். திருவள்ளுர், கடலூர், விருதுநகர், மத்திய சென்னை, தஞ்சை ஆகிய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அனைவருக்கும் மாலை வணக்கம்.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கும், அண்ணன் முனுசாமி அவர்களுக்கும், அவை தலைவர் அவர்களுக்கும், தங்கமணி, வேலுமணி அவர்களுக்கும், எங்கள் வீட்டுக்கு வந்த பெஞ்சமின் அவர்களுக்கும், நத்தம் விஸ்வநாதன், அனைத்து மூத்த தலைவர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த எங்கள் மாவட்ட கழக செயலாளர்களுக்கும், மகளிர் அணியை சேர்ந்தவர்களுக்கும், என்னுடன் வந்த துணைச் செயலாளர் எல் கே சுதீஸ், இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ் மற்றும்  இங்கே இருக்கும் அனைவருக்கும் கேப்டன் உடைய ஆசீர்வாதத்தோடு தேசிய முற்போக்கு திராவிட பொதுச் செயலாளர் என்னுடைய பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் முறையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கட்சி அலுவலகத்திற்கு இங்கு வந்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன். ஏனென்றால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த ஒரு இடம். ஒரு புரட்சியை ஏற்படுத்தி சகாப்தத்தை ஏற்படுத்திய இடத்தில் இருந்து இன்றைக்கு கேப்டன் ஆசிர்வாதத்தோடு இந்த இடத்தில் இருந்து உங்கள் அனைவரையும் சந்திப்பதில் உண்மையிலேயே அந்த 3 தெய்வங்களுக்கும் பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் ஒரு சரித்திரத்தை சகாப்தத்தை உருவாக்கியவர்கள் கேப்டன், எதிர்க்கட்சித் தலைவராக ஒரு மிகப்பெரிய சரித்திரத்தை 2011 இல் உருவாக்கினோம். பத்திரிக்கை நண்பர்கள் நீங்கள் என்கிட்ட கேட்டீங்க. 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள் இதற்கு காரணம் என்ன என்று.. 2011 இல் ஏற்பட்ட ஒரு மாபெரும் வெற்றி கூட்டணி மீண்டும் உருவாகி இருக்கிறது.

அந்த வெற்றி மீண்டும் இந்த பாராளுமன்ற தேர்தலிலும், அதற்கு அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலிலும். 2026 சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். இந்த கூட்டணி ஒரு மாபெரும் வெற்றி கூட்டணியாகவும் அமையும் என்பதில் இந்த நேரத்தில் சொல்கிறேன். எனவே இந்த கூட்டணி ஒரு மிகப்பெரிய ஒரு வெற்றியை தமிழகத்தில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் நிச்சயம் அமைக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

அதிமுகவுடன் தேமுதிக இணைந்தது ராசியான கூட்டணி, வெற்றி கூட்டணி. தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக கூட்டணியை விரும்பினார்கள். அதன்படி கூட்டணி அமைந்துள்ளது. மாபெரும் வெற்றி கூட்டணி மீண்டும் உருவாகி உள்ளது. அதிமுக – தேமுதிக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும். எத்தனை முனை போட்டி வந்தாலும் அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். 2011 இல் சரித்திரம் படைத்தது போல் அந்த வரலாறு இந்த நாடாளுமன்ற தேர்தலில் தொடரும்” என தெரிவித்தார்..

2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர விடுதியில் அதிமுக – தேமுதிக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.