தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், காங்கிரஸ் கட்சிக்கு புதியவர் அல்ல என்றும், கூட்டணி முடிவுகளை சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை வைத்து எடுக்க முடியாது என்றும் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விஜய், கடந்த 2010-ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து கட்சியில் இணைவது குறித்து ஆலோசனை செய்திருக்கிறார். சில காரணங்களால் அது அன்று நடக்கவில்லை. அதனால் அவர் எங்களுக்குத் தெரியாதவர் அல்ல.
அண்மையில் மாநிலத்தில் ஒரு துரதிர்ஷ்டவசமான துயர சம்பவம் நடந்தபோது தலைவர்கள் பேசுவது என்பது வழக்கம். அதை வைத்தே அது தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் என்று நாம் சொல்லிவிட முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும், “நாங்கள் இப்போதும் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். இந்தக் கூட்டணி நீண்ட காலமாகத் தொடர்கிறது. எனவே, தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால், சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை வைத்து கூட்டணி முடிவை எடுக்கிறோம் என்று நினைக்க வேண்டாம்” என்று கூறி, த.வெ.க.வுடனான கூட்டணி குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
