தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என செங்கோட்டையன் கூறியிருந்த கருத்தை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மிகக் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “அரசியலில் கனவு காண்பதற்கு எல்லாருக்கும் தகுதி இருக்கிறது. ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் வரை அவர்கள் தாராளமாகக் கனவு காணட்டும். விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் ஓட்டுகள் பிரியலாம் அல்லது ஒரு சில இடங்களில் அவர் வெற்றி பெறலாம், அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் 200 தொகுதிகளில் வெற்றி என்பதெல்லாம் ரொம்ப ஓவர்” எனத் தெரிவித்தார்.

​மேலும், விஜய்யின் அரசியல் தாக்கத்தை ஒரு ‘விசில்’ சத்தத்தோடு ஒப்பிட்டு அவர் விமர்சித்தார். “இது ஒன்றும் பெரிய பாம் சத்தம் கிடையாது, வெறும் விசில் சத்தம் தான். விசில் அடித்தால் அது ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் கேட்கும், அதுபோலத்தான் விஜய்யின் அரசியல் தாக்கமும் ஒரு எல்லைக்கு உட்பட்டதுதான். இது பெரிய அளவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது” எனத் தமிழிசை தனது பாணியில் சுட்டிக்காட்டினார். தமிழிசையின் இந்த ‘விசில்’ விமர்சனம் தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் இது விவாதப் பொருளாகியுள்ளது.