பீகார் அரசியலில் நீண்டகாலம் கோலோச்சிய முதல் மந்திரி நிதிஷ் குமார், டெல்லி அரசியலை நோக்கி நகரத் திட்டமிட்டுள்ள நிலையில், அவரது மகன் நிஷாந்த் குமார் இன்று ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இது பீகார் மாநில அரசியலில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
பீகாரின் நீண்டகால முதல் மந்திரியாகப் பணியாற்றி வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் மூலம், அவர் மாநில அரசியலில் இருந்து விலகி, தேசிய அரசியலுக்கு (டெல்லி) மாற முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
நிதிஷ் குமாரின் இந்த முடிவைத் தொடர்ந்து, அவரது அரசியல் வாரிசு யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாரின் அரசியல் வருகைக்கு நிதிஷ் குமார் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக, அம்மாநில மந்திரி விஜய் குமார் சவுத்ரி உறுதிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், கட்சியின் மூத்த மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் நிஷாந்த் குமார் முறைப்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். முன்னதாக, கட்சியின் எதிர்கால வியூகங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நிஷாந்த் குமார் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
நிஷாந்த் குமாரின் அரசியல் வருகை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பீகார் மாநிலத்தின் துணை முதல் மந்திரி பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் பலமாக அடிபடுகிறது. இது குறித்துக் கட்சிக்குள் ஏற்கனவே ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாகவும், நிதிஷ் குமாரின் ஆதரவாளர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பீகாரின் மிக முக்கியமான அரசியல் குடும்பத்தின் வாரிசு களமிறங்கியிருப்பது, வரவிருக்கும் தேர்தல்களில் ஜேடியு கட்சியின் போக்கை எவ்வாறு மாற்றப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
