ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில், மருமகன் ஒருவர் தனது மாமியாரின் மூக்கை அறுத்து, அந்தப் பகுதியை எடுத்துச் சென்ற கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  சோஹன்லால் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவி வீட்டை விட்டு வெளியேறி ஓராண்டாகத் தனியாக வசித்து வருகிறார்.

இந்த விவகாரத்தில், மனைவியின் குடும்பத்தினருக்கும் சோஹன்லாலுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வந்துள்ளது. அவ்வப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்களும், சண்டைகளும் ஏற்பட்டு வந்தன. உறவினர்கள் பலர் தம்பதியினரைச் சேர்த்து வைக்கப் பலமுறை சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், தனது மருமகன் சோஹன்லால் மீது புகார் அளிப்பதற்காக, அவரது மாமியார் கெலி தேவி நேற்று முன்தினம் மாலை காவல் நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இதையறிந்த சோஹன்லால், வழியிலேயே அவரை வழிமறித்தார். ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சோஹன்லால், மாமியார் என்றும் பாராமல் கத்தியால் அவரது மூக்கை அறுத்துள்ளார். மேலும், அறுக்கப்பட்ட மூக்கின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய கெலி தேவியை, அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு, மேல் சிகிச்சைக்காக குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், தலைமறைவாகியுள்ள சோஹன்லாலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடும்பப் பிரச்சனையைச் சட்டரீதியாக அணுகாமல், இத்தகைய கொடூரமான வன்முறையில் ஈடுபட்ட மருமகனின் செயலுக்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.