கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் உள்ள மேட்டு தெரு அருகே கடையில் பணியாற்றி வரும் 24 வயது பெண்ணும், நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (26) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர்களின் காதலுக்கு அந்த பெண்ணின் பெற்றோர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று காலை மதுபோதையில் கடைக்கு வந்த அண்ணாமலை, அங்கு பணியில் இருந்த தனது காதலியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர் அந்த பெண்ணின் தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை, தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணின் கன்னத்தில் வெட்டிக் கீறியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் வலி தாங்காமல் அலறியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த அண்ணாமலை, அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, காயமடைந்த பெண்ணை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
