தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள டாட்டா இன்ஸ்டியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் நிறுவனத்தில் பணியாற்றும் அறிவியலாளர்கள், சர்க்கரை நோயின் விளைவுகள் குறித்து புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில், சில எலிகளை தேர்வு செய்து, தினமும் 4 முதல் 5 தடவைகள் வரை சர்க்கரை கலந்த டீ, காபி மற்றும் குளிர்பானங்களை வழங்கினர். ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஒரு முறை இந்த பானங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆய்வு முறையே தொடர்ந்து 2 ஆண்டுகள் நடைபெற்று வந்தது.

ஆய்வு முடிவில், அந்த எலிகள் அனைத்திற்கும் டைப்–2 வகை சர்க்கரை நோயும் உடல் பருமனும் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சர்க்கரை கலந்த பானங்களை அடிக்கடி குடிக்கும் பழக்கம், மனிதர்களுக்கும் அதேபோன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, தினமும் 2 வேளை இனிப்பான டீ, காபி போன்ற பானங்களை குடிக்கும் நபர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும், இது உடல் உறுப்புகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், டீ, காபி போன்ற பானங்களில் உள்ள ‘சுக்ரோஸ்’ எனும் இயற்கை இனிப்புப் பொருள், கல்லீரல் தசைகள் மற்றும் சிறுகுடல்களில் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் இந்த ஆய்வில் வெளிவந்துள்ளது. இதன் அடிப்படையில், பொதுமக்கள் இனிப்பான பானங்களை தவிர்த்து, அதிக அளவில் சர்க்கரை இல்லாத பானங்களை பரிசீலிக்க வேண்டும் எனவும், மாறாக குளிர்பானங்களை முற்றிலும் தவிர்ப்பது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது எனவும் ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.