
நாடு முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். ஏனெனில் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணம் வசதியாகவும் செலவு குறைந்ததாகவும் இருக்கிறது. இதன் காரணமாக நாட்டில் பெரும்பாலான மக்கள் ரயிலில் செல்வதையே அதிக அளவில் விரும்புகிறார்கள். பொதுவாக ரயில்களில் செல்லும் போது ஏசி பெட்டிகளில் கம்பளிகள் மற்றும் போர்வைகள் போன்றவைகள் பயணிகளுக்கு வழங்கப்படும். இந்நிலையில் இந்தியன் ரயில்வே நிர்வாகத்திடம் ஆர்டிஐ எழுப்பிய கேள்வியில் ஒரு அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அதாவது ரயில்களில் வழங்கப்படும் ஏசி பெட்டிகளில் உள்ள கம்பளிகள் 2 மாதத்திற்கு ஒருமுறை மட்டும்தான் துவைக்கப்படுமாம்.
அதன் பிறகு ஒவ்வொரு பயணம் முடிவடைந்த பிறகும் ரயில்களில் உள்ள வெள்ளை தலையணை உரைகள் மற்றும் வெள்ளை போர்வைகள் போன்றவைகள் உடனடியாக சலவைக்கு அனுப்பப்படும் என்றும் கம்பளிகள் மட்டும் 2 மாதங்களுக்கு ஒரு முறை துவைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கறை, ஈரம் மற்றும் துர்நாற்றம் இருந்தால் அவை உடனடியாக சலவைக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் ரயில்வே நிர்வாகம் கம்பளி போர்வைகள் இரு மாதங்களுக்கு ஒரு முறை தான் துவைக்கப்படும் என்று சொன்ன தகவல் ரயில் பயணிகள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.