திருமண ஆசைவார்த்தை கூறி இரண்டு ஆண்டுகள் உடலுறவு கொண்டுவிட்டு, பின் திருமணம் செய்ய மறுப்பது ‘கற்பழிப்பு’ (Rape) குற்றத்தின் கீழ் வராது எனத் தெரிவித்துள்ள கர்நாடக உயர் நீதிமன்றம், வழக்கறிஞர் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், வழக்கறிஞர் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் தளம் வழியாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக அந்த வழக்கறிஞர் தன்னுடன் உடலுறவு கொண்டதாகவும், ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும், அந்த வழக்கறிஞருக்கு அவரது குடும்பத்தினர் வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில், பெங்களூரு போலீசார் அந்த வழக்கறிஞர் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்தனர்.

தன் மீது பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த வழக்கறிஞர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா தனது தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:”திருமண ஆசைவார்த்தை கூறி, இருவர் தங்களின் பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவில் ஈடுபடுவது கற்பழிப்பு ஆகாது. இதனை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது.”

“பாதிக்கப்பட்டதாகக் கூறும் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர் என்பதை அவரே தனது புகாரில் ஒப்புக்கொண்டுள்ளார். இத்தகைய சூழலில், திருமண ஆசைவார்த்தை கூறி தன்னை ஏமாற்றியதாக அவர் கூறுவதை ஏற்க முடியாது.

திருமண வாக்குறுதியை மீறுவது என்பது ஒப்பந்த மீறலாகவோ அல்லது ஏமாற்றுதலாகவோ கருதப்படலாமே தவிர, அதனைப் பாலியல் வன்கொடுமையாகக் கருத முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி, வழக்கறிஞர் மீது பதியப்பட்ட கற்பழிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாகக் கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விசாரணையையும் ரத்து செய்வதாகத் தீர்ப்பளித்தார்.