
திருப்பத்தூர் மாவட்டம் நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன காளி. இவரது மகன் பரமசிவம்(35). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டு நாடக கலைஞரான பரமசிவம் ஆம்பூர் பகுதியில் தெருக்கூத்து நாடகத்தில் நடிப்பதற்காக சென்றார். அப்போது பத்தாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமிக்கும் பரமசிவத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
ஒரு நாள் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தைகள் கூறி பரமசிவம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதற்கு சிறுமி உடன்படாததால் பரமசிவம் துப்பட்டாவால் சிறுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் சிறுமியின் முகத்தை சிதைத்து அவர் அணிந்திருந்த 5 கிராம் தங்க நகை 6 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பி சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பரமசிவத்தை கைது செய்து விசாரித்ததில் உண்மை தெரியவந்தது. இந்த வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பரமசிவத்திற்கு ஆயுள் தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.