இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், நிமிடங்களில் தயாராகிவிடும் நூடுல்ஸ் உணவுகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது விருப்பமான உணவாக மாறிவிட்டன. மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது அவசர கால உணவாகவோ உட்கொள்ளப்படும் இந்த நூடுல்ஸ், சுவைக்கு தரும் முன்னுரிமையை ஆரோக்கியத்திற்குத் தருவதில்லை என்பதை நாம் உணர வேண்டும்.

குறிப்பாக, தொடர்ந்து நூடுல்ஸ் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களுக்கு இது மெல்லக் கொல்லும் ஆபத்தாக மாறக்கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். நூடுல்ஸில் அதிக அளவில் சேர்க்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட மைதா, உடலுக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் எதுவுமில்லாத வெறும் கலோரியை மட்டுமே அளிக்கிறது.

மேலும், அதில் சுவைக்காகவும் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காகவும் சேர்க்கப்படும் சோடியம், இரசாயனப் பொருட்கள் மற்றும் பதப்படுத்திகள் உடலின் செரிமான மண்டலத்தைப் கடுமையாகப் பாதிக்கின்றன. தொடர்ச்சியாக இதனை உட்கொள்ளும்போது, செரிமானக் கோளாறுகள், மலச்சிக்கல் மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதோடு, இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது.

குழந்தைகளின் வளர்ச்சியில் ஊட்டச்சத்துக்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கும் நிலையில், நூடுல்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் அவர்களின் பசியைக் கட்டுப்படுத்தி சத்தான உணவுகளை உண்பதைத் தடுக்கின்றன. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு, இளம் வயதிலேயே உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

எனவே, நாவிற்குத் தரும் தற்காலிகச் சுவையை விட உடலின் நீண்டகால ஆரோக்கியமே முக்கியம் என்பதை உணர்ந்து, நூடுல்ஸ் உண்பதை முற்றிலுமாகத் தவிர்ப்பதோ அல்லது வெகுவாகக் குறைத்துக் கொள்வதோ நமது உடல்நலத்திற்கு மிகவும் நன்மையளிக்கும்.