மத்தியபிரதேசம் மாநிலம் கோபாலில் அரசு மியூசியம் ஒன்று இருக்கிறது. இந்த மியூசியத்தில் விலை மதிப்பற்ற நவாப் மற்றும் ஆங்கிலேயர் காலத்து தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங்கள் உள்ளது. இந்நிலையில் அந்த மியூசியத்தை இரவு மூடிவிட்டு, மறுநாள் காலையில் ஊழியர்கள் வந்து திறந்து பார்க்கும் போது அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் அந்த ஊழியர்கள் மியூசியத்தை சுற்றி பார்த்தனர். அப்போது மியூசிய வளாகத்தில் ஒருவர் மயக்கமடைந்து கிடந்தார். அவருக்கு அருகில் ஒரு பெரிய பை இருந்தது. அதை திறந்து பார்க்கும் போது ஆபரணங்கள் மற்றும் நாணயங்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூபாய் 15 கோடி இருக்கும்.

அதன் பிறகு மயக்கமாக இருந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் கூறியதாவது, அவரது பெயர் வினோத் யாதவ். இவர் திருடிக் கொண்டு குதித்து தப்பிக்க முயன்ற போது 23 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் மயக்கம் அடைந்துள்ளார்.

தூம் படப்பாணியில் இந்த திருட்டை நடத்த முயன்றுள்ளார். இந்த மியூசியத்தில் மொத்தம் 50 இடங்களில் அவரது கைரேகை பதிவாகியுள்ளது. மொத்தம் 50 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் இருக்கின்றன.

அதில் அவர் 15 கோடி மதிப்புள்ள நகைகளை திரட்டியுள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது, தப்பித்து செல்ல முயன்ற போது பாதுகாப்பாளர் ரோந்தில் இருந்தால் அந்த திட்டத்தை கைவிட்டதாகக் கூறினார். எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும், படிப்புச் செலவுக்காகவும் திருடியதாக கூறினார்.

வினோத் உள்ளே இருந்திருக்கும் போது, வெளியே யாராவது இருந்திருக்க வேண்டும் என்று காவல்துறையினர் சந்தேகம் படுகிறார்கள். இதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.