நொய்டா, ஒரு  குடியிருப்பு வளாகத்தில் உள்ள பகல்நேர பராமரிப்பு (டே-கேர்) மையத்தில் 15 மாத பெண் குழந்தை தாக்கப்பட்டதாக புகார் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட பராமரிப்பு உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தையின் தொடைகளில் ‘கடித்த காயங்கள்’ தென்பட்டதை பெற்றோர் முதலில் ஒவ்வாமை என நினைத்தனர். மருத்துவர் பார்த்ததில் ‘கடித்த அடையாளம்’ உறுதி. பின்னர் சிசிடிவி காட்சிகளைச் சரிபார்த்ததில், உதவியாளர் குழந்தையைத் தாக்கி கீழே தள்ளிய காட்சிகள் இருப்பது வெளியானது. குடியிருப்பாளர் சங்கம் நடத்தும் இந்த மையம் டெல்லி NCR பெற்றோர் பயன்படுத்தும் வசதிகளில் ஒன்று; சம்பவம் அங்குள்ள குடும்பங்களில் பீதியை ஏற்படுத்தியது.

பெற்றோர் செக்டர்–142 போலீசில் புகார் அளித்தனர். மைய உரிமையாளர் மற்றும் உதவியாளர் எதிர்கொள்ளப்பட்டபோது ‘தவறான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாகவும் , மிரட்டல்’ விடுத்ததாகவும்  குற்றச்சாட்டு. போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை தொடங்கி, சம்பந்தப்பட்ட உதவியாளரை கைது செய்தனர்.

“>

 

குழந்தையின் தந்தை சந்தீப், மே 21 முதல் தினமும் 2 மணி நேரம் குழந்தையை மையத்தில் வைப்பதாகவும், ‘ஆசிரியர் மேற்பார்வை’ என வாக்குறுதி அளித்தும், நடைமுறையில் உதவியாளர் தான் பார்த்ததாகவும் கூறினார். இந்த சேவைக்காக ₹2,500 செலுத்தியதும் தெரிவித்தார். இதே மையத்தில் தங்கள் குழந்தைக்கும் பாதிப்பு என மற்றொரு குடும்பம் கூறி, விரைவில் புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

உதவியாளர் ‘மைனர்’ என்பதும் வெளிப்பட்டதால், பணியமர்த்தல் விதிமுறைகள் மீது கேள்வி. மையத்தை நடத்தும் சாரு மைனரை எவ்வாறு வேலைக்கு எடுத்தார், உரிமம் (லைசன்ஸ்) வழங்கலில் முறைகேடு உள்ளதா என்பதையும் போலீஸ் விசாரித்து வருகிறது. விசாரணையில் முரண்பாடுகள் உறுதியானால் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும். குடியிருப்பு வளாக டே-கேர்களில் ஊழியர் தகுதி–பின்னணி சரிபார்ப்பு, நிரந்தர ஆசிரியர் மேற்பார்வை, பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என இந்தச் சம்பவம் தெளிவாக நினைவூட்டுகிறது.