வேலை செய்யும் இடத்தில் வெறும் வாய்மொழி வாக்குறுதிகளை மட்டும் நம்பி ஏமாந்த ஒரு இளைஞரின் கதை தற்போது இணையதளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சொந்த ஊருக்கு அருகிலேயே 15 லட்ச ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வந்த அந்த இளைஞருக்கு, வேறொரு நிறுவனத்தில் 26 லட்ச ரூபாய் சம்பளத்தில் புதிய வேலை கிடைத்தது.

அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தபோது, அவரது மேலாளர் அவரிடம் பேசி, “இங்கேயே இருங்கள், அடுத்த மாதமே உங்கள் சம்பளத்தை 26 லட்சமாக உயர்த்தித் தருகிறோம்” என வாய்மொழியாக உறுதியளித்தார். அந்த வாக்குறுதியை உண்மையாக நம்பிய இளைஞர், தனது கையில் இருந்த பெரிய வேலை வாய்ப்பை மறுத்துவிட்டு பழைய நிறுவனத்திலேயே தொடர்ந்தார்.

ஆனால், புதிய நிறுவனத்தில் சேருவதற்கான காலக்கெடு முடிந்த பிறகு, மேலாளர் தனது பேச்சை அப்படியே மாற்றிக்கொண்டார். சம்பள உயர்வு எதுவும் தர முடியாது என்றும், பழைய சம்பளமான 15 லட்ச ரூபாயே தொடரும் என்றும் நிர்வாகம் கையை விரித்துவிட்டது.

இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ள பலரும், “கார்ப்பரேட் உலகில் எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் இல்லாமல் எதையும் நம்பக்கூடாது” என்று எச்சரிக்கின்றனர். “நம்பிக்கை முக்கியம்தான், ஆனால் ஆவணங்களே நமக்கான பாதுகாப்பு” என்பதே இந்த கசப்பான அனுபவம் உணர்த்தும் பாடம் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.