கொல்கத்தா அணிக்காக சதம் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார் வெங்கடேஷ் ஐயர்.

16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியும் மும்பை அணியும் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் அறிமுகமானார். அதேபோன்று சூர்யகுமார் யாதவ் தலைமையில் மும்பை அணி இருந்தது.

கொல்கத்தா அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர், ஆனால் முதல் ஓவரிலேயே ஜெகதீசன் விக்கெட் இல்லாமல் இருந்தார். அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் , மும்பை அணியின் பந்துகளை அடித்து ஆட, மறுபுறம் வந்த வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் அடிக்கவில்லை. ரஹ்மானுல்லா குர்பாஸ் 8 ரன்களும், நிதிஷ் ராணா 5 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 13 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் ஐயர் 51 பந்துகளில் 6 பவுண்டரி, 9 சிக்ஸர்களை விளாசி 104 ரன்கள் சேர்த்தார், ரிங்கு சிங்கும் 18 ரன்களுக்கு அவுட் ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் சேர்த்தது. ஆண்ட்ரே ரசல் 21 ரன்களுடனும், சுனில் நரைன் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மும்பை அணி சார்பில் ஹிருத்திக் ஷோக்கீன் 2 விக்கெட்டும், பியூஷ் சாவ்லா, கிரீன், டுவான் ஜான்சன், ரிலே தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். அதன்பின் மும்பை அணி அதிரடி துவக்கத்தை வெளிப்படுத்தியது. ரோஹித் சர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இஷான் கிஷன் 5 சிக்ஸர்களுடன் வானவேடிக்கை வெளிப்படுத்தினார். அவர் 25 பந்துகளில் 58 ரன்கள் குவித்து அதிரடி காட்டி  வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.. அடுத்து திலக் வர்மா 30 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 43 ரன்களும் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

நேஹால் வதேரா 6 ரன்களில் வெளியேற, கடைசியில் டிம் டேவிட் 24* ரன்கள் எடுக்க மும்பை அணி 17.4 ஓவரில் 5 விக்கெட் இழந்து 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிரீன் ஒரு ரன்னுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை அணி. கொல்கத்தா அணி சார்பில் சுயுஷ் சர்மா 2 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி, ஷர்துல் தாக்கூர், லோகி பெர்குசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இப்போட்டியில் கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் சதம் விளாசியதன் மூலம் அந்த அணிக்காக சதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.. ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டின் முதல் போட்டியில் பிரண்டன் மெக்கல்லம்  விளாசிய செஞ்சுரிக்குப் பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 15 வருடங்களுக்குப் பிறகு 2வது சதத்தை பதிவு செய்தார் வெங்கடேஷ் ஐயர்..