அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள லேண்ட் ஓ’ லேக்ஸ் பகுதியில், ஒரு பெண் தனது செல்ல நாயைக் காப்பாற்றும் பொருட்டு, ஒரு வலிமையான முதலைக்கு எதிராக தைரியமாக சண்டையிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டேனி ரைட் எனும் அந்த பெண், தனது நான்கு மாத செல்ல நாய் ‘டாக்ஸை’ வீட்டின் பின்புற பகுதியில் நடைப்பயிற்சி செய்ய அழைத்துச் சென்றிருந்த போது, திடீரென ஒரு 15 அடி நீளமுள்ள முதலை தண்ணீரிலிருந்து வெளியே பாய்ந்து, நாயின் கழுத்தைப் பிடித்து இழுக்கத் தொடங்கியது. இது பற்றி அந்த பெண் கூறுகையில்,
“நான் திடீரென ஒரு அலறல் சத்தம் கேட்டேன். என்ன நடந்தது என்று பார்க்கும் போது, ஒரு முதலை என் செல்ல நாயைப் பிடித்து இழுத்துச் சென்றது. ஆனால் அதை நான் விட்டுவிடப் போவதில்லை!” என்று உருக்கமாக கூறினார். முதலை தாக்கியதைக் கண்டதும், அந்தப் பெண் உடனடியாக தனது நாயைப் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார். கைகளால் அடித்து, கண்ணில் பலமாக குத்தியதன் காரணமாக முதலை சிறிது நேரம் திகைத்தது. அந்த தருணத்தை பயன்படுத்தி நாயை வெளியே இழுத்துக் கொண்டு வந்தார். அதிசயமாக, செல்ல நாய் எந்த காயமும் இன்றி தப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தில் டேனி ரைட் சில சிறிய காயங்களுக்கு ஆளானாலும், தற்போது மருத்துவ சிகிச்சையுடன் நலமாக உள்ளார். இதுகுறித்து அறிந்த புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த முதலையை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். முதலை மிகவும் வலிமையானதும், அதிரடியானதுமானதாலும், அதைப் பிடிக்க அதிகாரிகள் பெரிதும் சிரமப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் முதலைகள் ‘நீர் அரக்கர்கள்’ என அழைக்கப்படுவது இவ்வாறான தாக்குதல்களின் காரணமாகவே. சதுப்பு நிலங்கள் மற்றும் குளங்களில் பதுங்கியிருக்கும் இவை, இரையை எதிர்பாராமல் தாக்கும் திறனைக் கொண்டவை. இந்நிகழ்வு, ஒரு பெண்ணின் செல்லப்பிராணிக்கான அன்பும், தைரியமும் எவ்வளவு வலிமையானதாய் இருக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் வகையிலும், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
