அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றுவரி குடிநீர் வரி ஆகியவற்றை செலுத்த வேண்டும் அப்படி செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்படும் சொத்தின் வருடம் மதிப்பில் 7% சென்னை குடிநீர் வாரியத்தால் விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஒவ்வொரு அரையாண்டிற்கும் 3.5 சதவீதம் பிரித்து வசூலிக்கப்படுவதே வழக்கம்.
அதன்படி இந்த வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற்றால் அதற்கான கட்டணத்தை உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தாவிட்டால் வாரிய ஒழுங்குமுறை விதிகளின்படி குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இணைப்பு துண்டிக்கப்பட்டும் வரி செலுத்தாவிட்டால் நிலுவைதாரரின் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.