
தமிழகத்தில் சமீப காலமாகவே பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இப்படியான நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக அரசு பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்காத நிலையில் அதற்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும். தலைமை ஆசிரியர்கள் 6000 பேர் வரை பள்ளி கல்வித்துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
அதன் பிறகு தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தங்களுடைய பள்ளிகளுக்கு சக ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். குழந்தைகளுக்கு இரண்டாவது பெற்றோரான ஆசிரியர்கள் அவர்களுக்கான பாதுகாப்பை எப்படி அளிக்க வேண்டும் என்ற விதத்தில் பயிற்சி வழங்க நாங்கள் திட்டமிட்டு வருகின்றோம். அது மட்டுமல்லாமல் ஜூன் மாதத்தில் அடுத்த கல்வியாண்டு தொடங்கும் போது விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் “எந்த ஒரு பிரச்சனை என்றாலும் வெளிப்படையாக துணிந்து சொல்வேன்” என்ற வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதனால் இனி பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடைபெறும் சம்பவங்கள் அறவே இருக்காது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.