அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மேலும் 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்திய பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக 25% வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போதைய நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கக்கூடியது என பொருளாதார வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.

இந்த சூழ்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள பதிலில், “இந்தியாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி என்பது முற்றிலும் நியாயமற்றது, நேர்மையற்றது மற்றும் தர்க்கமற்றது” எனக் கூறப்பட்டுள்ளது.

அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: “பல நாடுகள் தங்கள் தேசிய நலனுக்கேற்ப முடிவுகள் எடுக்கும் போது, இந்தியா மட்டும் குறிவைக்கப்படும் விதமான இந்த முடிவு ஒருபோதும் ஏற்கத்தக்கது அல்ல.

இந்தியா தனது 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, கச்சா எண்ணெய் இறக்குமதியை மேற்கொள்கிறது. இது சர்வதேச சந்தை நிலவரங்களை பொருத்தே அமைந்துள்ளது. அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.