பாலிவுட் திரையுலகில் ‘எக் தோ தீன்’, ‘டோலா ரே டோலா’ போன்ற சுமார் 2000-க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து, பல முன்னணி நட்சத்திரங்களையே ஆட வைத்தவர் சரோஜ் கான்.
ஆனால், திரையில் வண்ணமயமாகத் தெரிந்த அவரது நிஜ வாழ்க்கை மிகுந்த வலிகள் நிறைந்தது. மும்பையில் பிறந்த இவர், தனது 13 வயதிலேயே தன்னை விட 30 வயது மூத்தவரான பி. சோஹன்லால் என்ற 43 வயது இயக்குநருக்கு விருப்பமில்லாமல் திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
திருமணத்தின் அர்த்தம் கூட தெரியாத அந்தச் சிறு வயதில், 14 வயதிலேயே கர்ப்பமான சரோஜ் கானுக்கு, தனது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பது தெரிந்து பேரதிர்ச்சியடைந்தார்.
கணவரிடம் இருந்து பிரிந்து தனது குழந்தையைத் தனியாக வளர்த்து வந்த அவர், பின்னர் 1975-ல் ரோஷன் கான் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் பல துயரங்களையும், ஒரு குழந்தையின் இழப்பையும் சந்தித்த போதிலும், கலையில் தளராத உறுதியோடு போராடி இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடன அமைப்பாளராக உருவெடுத்தார். இன்றும் பல இளம் நடனக் கலைஞர்களுக்கு ஒரு மாபெரும் உந்துசக்தியாக சரோஜ் கான் திகழ்கிறார்.
