
தமிழகத்தில் ஏப்ரல் 16-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் சென்னை உட்பட 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற இருக்கிறது. இந்த ஆர்எஸ்எஸ் பேரணியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் ஊர்வலம் நடத்துவதற்கு காவல் துறையினர் 12 நிபந்தனைகளை விதித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட டிஎஸ்பி மற்றும் கமிஷனர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதன்படி ஊர்வலத்தின் போது தனி மனிதர்கள் பற்றியோ, சாதி, மதம் பற்றியோ தவறாக பேசக்கூடாது. அதன் பிறகு இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகள் குறித்து பேசக்கூடாது. நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் செயலை செய்யக்கூடாது. ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் கம்பு மற்றும் ஆயுதங்களை ஏந்தி செல்லக்கூடாது. இதனையடுத்து குடிநீர் வசதி, தீயணைப்பு கருவிகள், நடமாடும் கழிவறைகள், முதலுதவி மற்றும் கேமராக்கள் போன்ற வசதியை ஏற்படுத்திக் கொள்ள போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்ய வேண்டும்.
சாலையில் இடதுப்புறமாக நடந்து செல்வதோடு ஊர்வலத்தின் போது நான்கில் ஒரு பங்கு சாலையை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஊர்வலத்தின் போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் ஊர்வலத்தில் செல்லும் நபர்களை ஒழுங்குபடுத்தவும் போலீசாருக்கு தேவையான தன் ஆர்வலர்களை நியமிக்க வேண்டும். காவல்துறை அனுமதி கொடுத்துள்ள வழிதடத்தில் மட்டுமே ஊர்வலத்தை நடத்த வேண்டும். பெட்டி வடிவிலான ஒலிபெருக்கிகளை மட்டுமே பயன்படுத்துவதோடு 15 வாட்ஸுக்கு மிகாமல் சத்தம் இருக்க வேண்டும். பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கு ஊர்வலத்தில் இருப்பவர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் போன்ற 12 கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர்.