‘உம்ரான் மாலிக்கை விட வேகமாக பந்து வீச நான் இங்கு வந்துள்ளேன்’ என புதிய பாகிஸ்தான் நட்சத்திரம் தெரிவித்தார்.

முன்னதாக சோயப் அக்தர் மற்றும் பிரட் லீ வீசிய  வேகத்தை முறியடிக்க வந்தவர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வீரர் உம்ரான் மாலிக். ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காகவும், தேசிய ஜெர்சியிலும் தனது அசுர வேகத்தால் பிரகாசித்த வீரர் ஐபிஎல்லில் அதிவேக பந்து வீசி சாதனை படைத்துள்ளார்.  ஐபிஎல்லில் 157 கி.மீ. வேகத்திலும், மறுபுறம், தேசிய அணிக்காக ஆடும்போது இலங்கைக்கு எதிராக 156 கி.மீ. வேகத்தில் உம்ரான் மாலிக் வீசியுள்ளார்.

அதாவது, இந்தியன் பிரீமியர் லீக்கில் 157 கிமீ வேகத்தில் வீசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவர் சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 156 கிமீ வேகத்தில் பந்து வீசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவரின் அதிகபட்ச வேகத்தை அடைந்தார். அவரது முன்னேற்றம், குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களால் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பிஎஸ்எல்) சமீபத்திய வேக  பந்துவீச்சாளர் இஹ்சானுல்லா, உம்ரானை விட வேகமாக பந்து வீசுவேன் என்று அறிவித்துள்ளார். “முயற்சி செய்வேன். உம்ரான் மாலிக் மணிக்கு 157 கிமீ வேகத்தில் பந்து வீசினார். நான் அவரை விட வேகமாக வீசுவதற்கு கற்றுக்கொள்ள முயற்சிப்பேன். 160 கி.மீ வேகத்தில் வீச முயல்வேன் என்றார்.

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் ஏஜென்சியைச் சேர்ந்த 20 வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளர், இஹ்சானுல்லா பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சர்ஃபராஸ் அகமது தலைமையிலான குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாடும்போது 5/12 என்ற  சாதனையுடன் திரும்பினார்.

இஹ்சானுல்லா 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுவும் ஜேசன் ராய், உமர் அக்மல், சர்பராஸ் அகமது, இப்திகார் அகமது, நசீம் ஷா ஆகியோரின் பெறுமதியான விக்கெட்டுகள்.இஹ்சானுல்லாவின் தற்போதைய சராசரி வேகம் மணிக்கு 140 கிமீக்கு மேல். சர்பராஸை கிளீன் பவுல்டு செய்த பந்து மணிக்கு 150.3 கிமீ வேகத்தில் பறந்தது.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகிப் ஜாவேத் கூறியதாவது,  “உம்ரான் மாலிக் ஹாரிஸ் ரவூஃப் போல் பயிற்சி பெற்றவர் மற்றும் உடற்தகுதி பெற்றவர் அல்ல. ஒருநாள் போட்டிகளில் அவரைப் பார்த்தால், அவரது முதல் ஸ்பெல்லில் 150 கிமீ வேகத்தில் பந்து வீசுகிறார், ஆனால் 7வது அல்லது 8வது ஓவரில் வேகம் 138 கிமீ ஆகக் குறைகிறது” இது நிலைத்தன்மையின் விஷயம், ஒருமுறை அதிக வேகத்தில் எறிந்தால், அதில் எல்லாம் இல்லை என்று தெரிவித்தார்..