மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள சிவாஜி ராவ் தீவிர சிகிச்சை மருத்துவமனையில், மராத்தா இடஒதுக்கீட்டு போராட்ட தலைவர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 3) பிற்பகல் 1.30 மணியளவில் ஒருவர் அனுமதிக்கப்பட்ட வார்டிற்கு சென்றபோது, லிஃப்ட் அறுந்து திடீரென தரை தளத்திற்கு விழுந்தது.

அந்த நேரத்தில், பாட்டீலுடன் 10-12 ஆதரவாளர்கள் இருந்தனர். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதில், லிஃப்ட் வேகமாக கீழே விழும் காட்சியும், உள்ளே இருந்தவர்கள் பயத்தில் கூச்சலிடும் தருணங்களும் தெளிவாக பதிவாகியுள்ளன.

“>

 

அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தரை தளத்தில் இருந்த ஒருவர், லிஃப்ட் கதவுகளை வலுக்கட்டாயமாகத் திறந்து, அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினார். பின்னர் ஊடகங்களுக்கு பேசிய பாட்டீல், “லிஃப்ட் நகரத் தொடங்கியவுடன் திடீரென கீழே விழுந்தது. இது ஒரு பயங்கர அனுபவம். ஆனால் எல்லாரும் பாதுகாப்பாக உள்ளோம் என்பது நம்மை நெகிழச் செய்கிறது” என்று கூறினார்.

இச்சம்பவம் மருத்துவமனையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு பின்பற்றப்பட்டதா? என்ற கேள்விகளை எழுப்பி உள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. வீழ்ச்சிக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அது தொழில்நுட்பக் கோளாறா அல்லது அதிக சுமையா என்பதைக் கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன