தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா, கம்பம் நகரில் உள்ள ரேஷன் கடைகளில் திடீரென அதிரடி ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் கடைகளில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் அளவு சரியாக இருக்கிறதா என்பதை நேரில் சரிபார்க்கவே அவர் இந்த ஆய்வை மேற்கொண்டார். அப்போது, மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களில் பெருமளவில் எடை குறைவு இருப்பது கையும் களவுமாகப் பிடிபட்டது.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களை வாங்கி எடைபோட்டுப் பார்த்தபோது, 12 கிலோ அரிசி தர வேண்டிய இடத்தில் வெறும் 10 கிலோ மட்டுமே விநியோகிக்கப்பட்டது தெரியவந்தது. அதாவது, ஒவ்வொரு குடும்பத்தினரிடமிருந்தும் 2 கிலோ அரிசி திருடப்படுவது வெளிச்சத்திற்கு வந்தது. அதேபோல், 1 கிலோ வழங்கப்பட வேண்டிய துவரம் பருப்பிற்குப் பதிலாக வெறும் 750 கிராம் மட்டுமே கொடுத்து மக்களை ஏமாற்றி வந்ததும் இந்த ஆய்வின் மூலம் அம்பலமானது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா, அங்கிருந்த ரேஷன் கடைப் பணியாளர்களைக் கடுமையாக எச்சரித்தார். “பொதுமக்களுக்குச் சேர வேண்டிய அத்தியாவசியப் பொருட்களில் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் இது போன்ற தவறுகள் மீண்டும் நடந்தால், நேரடியாகச் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என எச்சரிக்கை விடுத்தார்.
12 கிலோ அரிசி..இதுல 10 கிலோ தான் இருக்கு
“எந்த ஜெயில்ல போடலாம்” ரேஷன் ஊழியர்களை கையும் களவுமாக பிடித்து நடுங்கவிட்ட TVK MLA @JeganathMishra_ 🔥 pic.twitter.com/L9WFs3f60C
— priya (@PriyankaSmile01) August 9, 2026
மேலும், கம்பம் நகரில் மட்டுமன்றி, மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு உடனடியாக இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். எம்.எல்.ஏ எடையைக் குறைத்துப் போட்ட பித்தலாட்டத்தை நேரில் பிடித்து எச்சரிக்கும் இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
