ஆந்திரா ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியை சேர்ந்த சாய் சுப்ரியா என்பவரை விஜயநகரத்தை சேர்ந்த மதுசூதனன் சென்ற 2008 ஆம் வருடம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இதில் மதுசூதனன் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த 2 குழந்தைகள் பிறந்த பிறகு மதுசூதனன் அவரது தாய் உமா மகேஸ்வரி மற்றும் உடன்பிறப்புகள் போன்றோரின் பேச்சை கேட்டு மனைவியை துன்புறுத்த தொடங்கினார்.

அதோடு தன் துன்புறுத்தல் வெளியே தெரிந்துவிட கூடாது என்பதற்காக கடந்த 11 வருடங்களாக மனைவியை வீட்டுக்குள்ளேயே ஒரு இருட்டு அறையில் அடைத்து முடக்கி வைத்திருந்தார் மதுசூதனன். இதனிடையே 11 வருடங்கள் பொறுத்து பொறுத்து பார்த்த சாய் சுப்ரியாவின் பெற்றோர் சென்ற 28-ம் தேதி தங்களது மகளை, மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அடைத்து வைத்திருப்பது குறித்து போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர்.

அதன்பின் நீதிமன்ற அனுமதியை காட்டி மதுசூதனன் வீட்டுக்குள் நுழைந்த காவல்துறையினர், தனி அறையில் அடைபட்டு கிடந்த சாய் சுப்ரியாவை மீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். மிகவும் மெலிந்து காணப்பட்ட சாய் சுப்ரியாவை உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இவ்வாறு 11 வருடங்கள் மனைவியை தனியாக அடைத்து முடக்கி வைத்திருந்த வக்கீல் மதுசூதனன் மனித உரிமை ஆணையத்தின் மாவட்ட துணைத் தலைவர் என சொல்லப்படுகிறது. அதனை தொடர்ந்து வக்கீல் மதுசூதனனை கைது செய்யும் முனைப்பில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.