தாய்லாந்து நாட்டில் 11 வயது சிறுவன் செய்த விபரீத செயலால், பௌத்த துறவிகள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தாய்லாந்தின் உபான் ராட்சதானி மாகாணத்தில் இருந்து முக்தஹான் மாகாணத்தில் உள்ள டான் டான் மாவட்டத்தை நோக்கி 35 பௌத்த துறவிகளும், அவர்களது 5 சீடர்களும் என மொத்தம் 40 பேர் கொண்ட குழுவினர் ஆன்மீக நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது கொண்டிருந்தபோது, அவ்வழியே அதிவேகமாக வந்த பிக் அப் டிரக் ரக வாகனம் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நடந்து சென்ற துறவிகளின் கூட்டத்திற்குள் பயங்கரமாகப் புகுந்தது.

இந்த கோர விபத்தின் வீரியத்தில், 5 பௌத்த துறவிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், படுகாயமடைந்த மற்றவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். எனினும், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மேலும் 3 துறவிகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

மேலும் 10 துறவிகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக்கோர விபத்தை ஏற்படுத்திய 11 வயது சிறுவன், தனது பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களது பிக் அப் டிரக் வாகனத்தைத் திருடி ஓட்டி வந்தது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, அந்த சிறுவனைக் காவலில் எடுத்துள்ள காவல்துறையினர், அவனது பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.