சேலம் பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் தனபால், அந்த பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இவருக்குச் சொந்தமான 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை தனது பெயருக்கு எழுதித் தருமாறு, சங்ககிரியில் காய்கறி கடையில் வேலை செய்து வரும் அவரது மகன் ஸ்ரீதர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று மதியம் தந்தையின் வீட்டிற்கு வந்த ஸ்ரீதர் மீண்டும் நிலம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தந்தை நிலத்தை எழுதித் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், தான் மறைத்து வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் தனபாலை சரமாரியாகக் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த தனபால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தப்பியோட முயன்ற ஸ்ரீதரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
நிலத்திற்காகத் தந்தையை மகனே கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.