100 வயது வரை ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது அனைவரின் ஆசையாகத்தான் இருக்கிறது. நீண்ட ஆயுள் என்பது முழுமையாக நம் கையில் இல்லாவிட்டாலும், நாம் வாழும் வாழ்க்கை முறையைச் சரியாக அமைத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்நாளை நிச்சயமாக உயர்த்த முடியும். 100 வயதைக் கடந்து வாழ்பவர்களின் பழக்கவழக்கங்களை ஆய்வு செய்தபோது, அவர்களிடம் சில எளிய அன்றாடப் பழக்கங்கள் பொதுவாக இருந்தது தெரியவந்துள்ளது.

தினமும் உடலை ஏதேனும் ஒரு வகையில் சுறுசுறுப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். பெரிய அளவில் கடினமான பயிற்சிகள் செய்யாவிட்டாலும், தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்வதும், வீட்டு வேலைகளைச் சுறுசுறுப்பாகச் செய்வதுமே போதுமானது. இது உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

நாம் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அன்றாட உணவில் அதிகளவில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் நட்ஸ் வகைகளைச் சேர்த்துக் கொள்வது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தரும். அளவோடு உண்பதும், தேவையில்லாத நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பதும் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

உடலுக்கு உடற்பயிற்சியும் உணவும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஆழ்ந்த தூக்கமும் மிக முக்கியம். தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை நிம்மதியாகத் தூங்குவது உடலின் செல்ல புதுப்பித்தலுக்கு உதவும். மேலும், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த தியானம் அல்லது பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது மனதை எப்போதும் அமைதியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.

இவை எல்லாவற்றையும் விட, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அன்பாக நேரத்தைச் செலவிடுவது மனிதனின் ஆயுளை அதிகரிக்கும் மிக முக்கியமான காரணியாகும். தனிமையைத் தவிர்த்து, மற்றவர்களோடு இணக்கமாக வாழும்போது மனம் மகிழ்ச்சியடைகிறது. 100 வயதை நோக்கிய ஓட்டத்தில் கவனம் செலுத்துவதை விட, இருக்கும் ஒவ்வொரு நாளையும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதே உண்மையான நீண்ட ஆயுளின் ரகசியமாகும்.